இன்றைய நாளில் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு வீடு அமைத்துக் கொள்ள வேண்டும்.
சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கையிலுள்ள பணத்துடனும் மேலும் கடன் வாங்கியும் வீடு அமைத்துக் கொள்கிறார்கள்.
வீடு கட்டத் தொடங்கும்முன்பு, தான் வீடு கட்டும் மண்ணில் உயிர் உள்ளதா என்றும், வீட்டின் நீள, அகலம், கணக்கிட்டு ஒரு ஜோதிடரிடம் மனையடி சாஸ்திரம் பற்றிக் கேட்டு அவர் கூறியபடி வீடு அமைக்கத் தீர்மானித்து வீட்டிற்கு தலைவாசல் எந்த திசையில் வைக்கவேண்டும் என்று கேட்டு அறிந்துகொண்டு ஒரு வாஸ்து நிபுணரிடம் வீட்டின் அமைப்பு, அறைகள் அமைப்பினையும் கேட்டறிந்து அதன்பின்பு ஒரு நல்லநாள் பார்த்து, பூமி பூஜைசெய்து, வீடு கட்டத் தொடங்குகிறார்கள். ஒரு வீடு கட்ட அதன் ஆரம்ப செயல்களுக்கே பல ஆயிரம் செலவுசெய்து விடுகிறார்கள்.
வாஸ்து நாள், நல்ல நாள் பார்த்து பூஜை செய்து, வீடு கட்டத் தொடங்கி கட்டி முடிப்பதற்குள் பல பிரச்சினைகளையும், சிரமங் களையும் சந்திக்கிறார்கள். சிலர் தான் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் வசிக்கும் போது, வாழ்வில் பல சிரமங்களை சந்திக்கிறார்கள். அதற்கு காரணமறிய ஜோதிடர் களிடம் சென்றால், வசிக்கும் வீடு சரியில்லை, விற்று விடுங்கள் என்கிறார். வாஸ்து நிபுணரிடம் கேட்டால் வீட்டின் அமைப்பு, அறைகள் அமைப்பு சரியில்லை; இடித்துவிட்டு நான் கூறுவதுபோன்று மாற்றி அமையுங்கள் என்று கூறிவிடுகிறார். மேலும் கணபதி ஹோமம், நவகிரக பூஜை செய்யுங்கள். சிரமங்கள் குறைந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.
கடன் வாங்கி கஷ்டப்பட்டு வீடு கட்டியும்கூட சிலர் நிம்மதி இல்லாமல் சொந்த வீட்டிலும் கஷ்டப்படவேண்டியிருக்கிறது..
சொந்த வீடு கட்டுவதற்குமுன்பு ஒருவருக்கு வீடு அமைய வேண்டிய முறை, வீட்டில் அறைகள் அமைப்பு, வீடு கட்டத் தொடங்கும் காலம், வெளிப்புற அமைப்பு பற்றி சப்தரிஷி நாடியில் ரிஷிகள் கூறியுள்ளதில் சிலவற்றை அறிந்துகொள்வோம்.
ஒருவருக்கு இப்பிறவியில் வீடு கட்டுவதற்கு யோகம் உள்ளதா என்று முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அவருக்கு வீடு அமையும் யோகம் இல்லையென்றால், மனைவி, குழந்தைகள் என யாருக்காவது சொந்த வீடு யோகம் உள்ளதா என அறிந்து சரியான காலம் அறிந்து வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும்.
ஒருவர் தனது முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக வீட்டிலோ அல்லது முன்னோர்கள் சம்பாதித்து வைத்த மனை, பூமியில் வீடு கட்டி வாழமுடியுமா? அல்லது தானே சுயமாக சம்பாதித்து நிலம் வாங்கி வீடு கட்டி வசிக்க முடியுமா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
வீடு கட்டத் தொடங்கும்போது அந்த வீட்டை எந்தவிதமான தடையும் இல்லாமல் கட்டி முடிக்க வேண்டுமென்றால் வாஸ்து நாள் பார்த்து ஆரம்பிக்கக்கூடாது. அதே போல அவரவர் ஜனன ஜாதகத்தில் வீடு கட்டும் யோக அமைப்புள்ள காலத்தில், வீடு கட்டத் தொடங்கும் நாளில் வீட்டினைக் குறிக்கும் கிரகம், கோட்சார நிலையில் பாவ கிரகங்கள் பார்வை சேர்க்கை இல்லாத நாளிலும் வீடு கட்டத் தொடங்கக்கூடாது. இந்த நாட்களில் வீடுகட்ட ஆரம்பித்தால் அந்த வீட்டை சுலபமாக உங்களால் கட்டி முடிக்க முடியாது. சுபக் கிரகங்களின் சேர்க்கை பார்வையுள்ள நாளில் வீடு கட்டத் தொடங்கினால் நீங்கள் எந்த தடையும் இன்றி வீட்டைக் கட்டி முடித்துவிடலாம்.
வீடு கட்டுவதற்கு முகூர்த்தம் செய்யும் நாளில், வீட்டினைக் குறிக்கும் கிரகத்திற்கு கோட்சார நிலையில் பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கை இருந்தால் வீடு கட்டி முடிக்க தடைகள் உண்டாகும், வீடு கட்டும் உரிமையாளருக்கு விபத்து, நோய் பாதிப்பு, உயிர் பாதிப்பு, பணப் பிரச்சினை, கோர்ட், கேஸ், வழக்கு என பல பிரச்சினைகள், சிரமங்கள் ஏற்படும். எதாவது ஒருவகையில் தடைகள் ஏற்படும்.
வீட்டின் அமைப்பி னால் உண்டாகும் தோஷங்கள் மற்றும் அதனால் அனுபவிக்கும் சிரமங்கள் சிலவற்றை யும் அறிந்துகொள்வோம்.
வீட்டில் பூஜை அறை சிறியதாக இருந்தாலோ அல்லது ஒரு அறையில் ஒரு சிறிய இடத்திலோ, செல்ஃப், அலமாரிகளில் இருந்தாலோ அந்தக் குடும்பத்தின் தலைவர் எதாவது ஒருவகையில் சிரமங்களை அனுபவித்துக்கொண்டு வாழ்ந்தி ருப்பார். பூஜை, தியானம், போன்றவற்றை சரியாக செய்யமுடியாது.
பூஜையறையில் தெய்வப் படங்கள், சிறிய விக்ரங்கள், பெரிய தெய்வப் படங்கள் இருந்தால், வாழ்க்கை யில் பலவிதமான தடை களைச் சந்திப்பார்கள்.
குடும்ப வாழ்வில் ஈடுபாடு இருக்காது.
கோவில் அருகில் அல்லது அதைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் உள்ள வீடுகளில் வசித்தால், பொருளாதா ரம் அழியும், குறையும், புத்திர, புத்திரிகளுக்கு சுப காரியம் தடைப்படும்.
வீட்டில் சமையலறை, மற்ற அறைகளைவிட சிறியதாக இருந்தால் திருமணத் தடை, பெண், பணம் சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும், மனைவிக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் குறையும், சுகம் அனுபவிக்க முடியாது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரியாக இராது. பொருட்கள் வைக்கும் ஸ்டோர் ரூம் சிறியதாக இருந்தால் தொழில் செய்யும் இடத்தில், பணிபுரியும் அலுவலகத்தில் பிரச்சினைகள் உண்டாகும்.
வீட்டின் ஜன்னலுக்கு வரும் வெளிச்சத்தில், ஒளியை, மாடிப்படி மறைக்கும்படி அமைந்திருந்தால் குழந்தை பாக்கியம் தடை படும், அற்ப ஆயுள் உள்ள குழந்தைகள் பிறப்பார்கள்.
வீட்டின் முன்வாசலுக்கு எதிரே மாடிப்படி இருந்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு மன நிம்மதி இராது. வீட்டின் முன்வாசலுக்கு எதிரே கழிப்பறை இருந்தால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் மன விரக்தியுடன் இருப்பார் கள். படுக்கையறை அருகே மாடிப்படி இருந் தால், குடும்பத் தலைவருக்கு மூலநோய், கட்டிகள், புற்றுநோய், ஆண்மைக் குறைவு உண்டாகும்.
சமையலறை அருகே மாடிப்படி இருந்தால் பணம் சம்பந்தமான தகராறு, பண விரயம் உண்டாகும். வரவேற்பு அறை உள்ளேயே மாடிப்படி இருந்தால், தொழில், வியாபாரம், பிரச்னைகள், இழப்பு உண்டாகும். அதிகாரிகள் பதவி உயர்வு தடைப்படும், அரசியல்வாதிகள், கட்சி தலைவர்களால் ஒதுக்கப்படுவார்கள். அல்லது அவர்களே பதவியை விட்டு விலகி விடுவார்கள். அரசியலை விட்டே ஒதுங்கி விடுவார்கள். காதல் சம்பந்தமான நிகழ்வுகள், காதல் திருமணம் உண்டாகலாம்.
ஒரு வீடு மூன்று மாதகாலம் பூட்டியிருந்தால் அந்த வீட்டில் தீய சக்திகள், துர் ஆவிகள் சூழ்ந்துவிடும். ஒரு குறுகிய சந்தின் வழியே சென்று வீட்டின் முன்வாசலை அடையும்படி வசிக்கும் வீடு இருந்தால், வீடு சொத்து, தகராறு ஏற்பட்டு அந்த வீட்டை விற்கும் சூழ்நிலை அமைந்துவிடும். வீட்டின் தென் கிழக்கு மூலைப் பகுதியில், கிணறு, குழி, பள்ளம், செப்டிக் டேங்க், அந்த மூலையில் உள்ள அறை பள்ளமாக இருந்தால் வீட்டு தலைவிக்கு, பெண்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். வீட்டின் தென்மேற்கு மூலையில் கிணறு, பள்ளம், செப்டிக் டேங்க், வீட்டின் அறை பள்ளமாக இருந்தால், ஆண்களுக்குப் பிரச்சினைகள் உண்டாகும். வீட்டில் மின் சாதன பொருட்கள் அதிகமிருந்தால் வீட்டில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு உண்டாகும்.
வீடு புதிதாக கட்டுபவர்கள், வீடு அதிர்ஷ்டமானதாக அமைய அவரின் ஜாதக ராசிப்படி, வீட்டின் தலைவாசல் எந்த திசையில் அமையவேண்டும்? எந்த திசை பார்த்து வீடு அமையவேண்டும் என்று ஜோதிடரிடம் கேட்டு வீடு கட்டுகிறார்கள். ஒருவர் வீடு கட்டி வசித்தால் அதில் வீடு கட்டுபவர் மட்டுமே வாழ்வது இல்லை.
அவரின் வம்ச வாரிசுகளும் அடுத்து, அடுத்து அந்த வீட்டில்தான் வசிப்பார்கள். அனைவரின் ராசியும் ஒன்றுபோல் இருக்குமா? என்றால் இருக்காது. ஒருவர் வீடு கட்டுவது அவருக்காக மட்டுமல்ல; வீடு எந்த திசையை நோக்கியும் கட்டலாம். ஆனால் வீட்டின் அறைகளும், சுற்றுப்புறங்களும் தோஷமின்றி அமையவேண்டும். வீட்டிற்கும், வீட்டில் வசிப்பவர்களுக்கும், தோஷம், தீமை தரும் பொருட்கள் வீட்டில் இல்லாமல் இருக்கவேண்டும். ஒரு வீடு தானாக தோஷப் படுவது இல்லை. வீடு அமைக்கும் முறையிலும், வீட்டின் உள்ளே நம் விருப்பம்போல் பயன்படுத்தும் பொருட்கள் மூலமே நாம்தான் தோஷத்தை உருவாக்கிக் கொள்கின்றோம்.
ஒருவரின் வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சினை, தடை, சிரமங்களுக்கு வீடு காரணம் இல்லை. அந்த வீட்டில் வசிப்பவர்கள்தான் காரணம். தங்கள் அறியாமையால் வீட்டிற்கு தோஷத்தை உருவாக்கிக்கொண்டு தாங்களும் சிரமம், கஷ்டம், தடைகளை அனுபவித்துக் கொள்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.
செல்: 93847 66742